வைகைநதியின் தந்தை கர்னல் திரு.பென்னிகுயிக்

என் இனிய வலைப்பூ நண்பர்களே

"வைகைநதிக்கரையில்" ஏதாவது பெயர்க்காரணமுண்டா?கேட்டார் நண்பர் ராஜ்குமார்.
காரணம் சொல்லும்போதே,வைகையின் வரலாற்றையும்,வைகையை எங்களுக்குத்தந்தஎங்கள் குலதெய்வமாம் கர்னல் திரு.J.பென்னிகுயிக் (Col. J.Penny Cuick)அவர்களைப்பற்றியும் சொல்ல உத்தேசித்ததின் விளைவே,இப்பதிவு.

எனது ஊர் தேனிமாவட்டம்(முன்பு மதுரை) வீரபாண்டி.கேரளா நோக்கிச்செல்லும்சாலையில் தேனியிலிருந்து 7கி.மீ தொலைவில் வைகைநதிக்கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம்.அருள்மிகு கெளமாரி திருக்கோயிலால் அந்த சுற்றுவட்டாரத்தில் பிரபலமாக உள்ள கிராமம்.
சித்திரையில்,மதுரைத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய திருவிழா நடைபெறும்.எங்கள் ஊர்த்திருவிழாவின் சிறப்பை சொல்லமுயன்ற எல்லா இடங்களிலும் நான் தோற்றுத்தான் போயிருக்கிறேன்.(சரி சரி,விட்றா...என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது)

இப்போது,வைகைக்கு வருவோம்.
வைகையின் பிறப்பிடம் பெரியார் அணை.பெரியார் அணை அமைந்துள்ள தேக்கடி,கேரளாவில்தமிழக எல்லையிலிருந்து சுமார் 5கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.(ஆனால் அணையின் நிர்வாகம் தமிழகத்தின் கையில்).
இந்நதியால்,இன்று தமிழகத்தில் 70,000 ஏக்கர் பரப்பு விவசாயம் நடைபெறுகிறது.
(அணையின் மட்டம் 152 ஆக இருந்தபோது 2,17,000 ஏக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது,கேரள அரசானது அணை பழுதாகி விட்டதாகவும்,அணையின் முழு கொள்ளவான 152 அடி நீர் தேக்குவது ஆலப்புழா,கோட்டயம்,எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ஆபத்தானதாகும் என்கிறது.தற்போது 136அடி தான் நீர் அனுமதிக்கப்பட்டுள்ளது)

தேக்கடியிலிருந்து 3இராட்சத குழாய் மூலம் மின்நிலையம் வந்து,பின் சுருளி மற்றும் பல கிளைஆறுகள் சேர்ந்து,எங்கள் ஊரைக்கடந்து செல்லும் ஆற்றுக்குப்பெயர் ,பெரியாறு அல்லது முல்லையாறு.தேனிக்கும் ஆண்டிபட்டிக்கும் இடையிலுள்ள வைகை அணையை வந்தடையும் போது,இது வைகை என அழைக்கப்படுகிறது.இந்த எல்லைக்கு மேல்தான் நீர் பற்றாக்குறை ஆரம்பம்.ஒரு காலத்தில்,எங்களை வாழவைத்துச்செல்கிற பெரியாறு,வைகை அணை கடந்து,மதுரையை தாண்டி இராமநாதபுரம் வரை சென்று,கடலில் கலக்குமாம்.

இப்போதெல்லாம்,மதுரைக்குச் செல்லுமுன்னே வறண்டுபோகிறது.இதற்கு,காமராஜரும் ஒரு காரணம் என்கிறார்கள். தமிழக எல்லைக்குள் இருந்த அணையை( இடுக்கி மாவட்டத்தை) 1952ல் திருவாளர் காமராஜர் ஏதோ சில காரணங்களுக்காக கேரளாவிற்கு கொடுத்துவிட்டு,நாகர்கோயில் பகுதியைப்பெற்றுள்ளார்.இல்லாவிடில்,152 அடி வரை நம்மால் நீர் தேக்கமுடியும்.)

பெரியார் அணையானது,கி.பி.1885த்தில் ஆங்கிலேய அரசால் தொடங்கி கி.பி.1895த்தில் கர்னல் J.பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய என்ஜியரால் கட்டிமுடிக்கப்பட்டது.தேக்கடி காட்டுப்பகுதியில் அந்தப்பகுதியில் பெய்கிற மழைநீர்யாவும் தேங்குவதையறிந்த ஆங்கிலேய அரசுஅணையன்று கட்டத்திட்டமிட்டது.ஆனால்,அடர்ந்த காட்டைத்திருத்துகிற பணியில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் அரசை பின்னடையச்செய்தது.உயிர்ச்சேதம் தொடர பணியை நிறுத்தியது அரசு.

தென்தமிழ்நாட்டுமக்கள் செய்த புண்ணியம்,கர்னல் பென்னிகுயிக் இத்திட்டத்தை விடமறுத்தார்.ஆனால் அரசு,நிதியை நிறுத்திக்கொண்டது.(எங்க கட்டுடி மாப்ள பார்ப்போம் அப்டினு).கர்னல் விடுவதாயில்லை.தன் சொந்த செலவில்,தன் சொத்துக்களையெல்லாம் விற்று,இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

அந்த மாமனிதன்,செய்த தியாகம்,இன்று தமிழகத்தின் ஒருபகுதி நிலப்பரப்பை செழிக்கவைத்து,பல்லாயிரம் குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறது.

எங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிற இந்த நதியை எங்களுக்கு தந்த அந்த மாமனிதனுக்கு,அவன் தயவால் உண்டு வளர்ந்த எங்கள் மூதாதைகளின் சார்பாயும்,என் தலைமுறை சார்பாயும்,என் சந்ததிகளின் சார்பாயும் அவன் குடும்பம் இருக்கும் திசைநோக்கி வணங்கி,அவனுக்கு பெருமைசேர்க்கும் நோக்கில் இந்தப் பதிவைச்சமர்ப்பிக்கிறேன்.


வீரமணி இளங்கோveeramanielango@hotmail.com


1.இப்போதும் எங்கள் கிராம பெரிசுகள்,திரு.பென்னிகுயிக்கை,அவரின் பெயரைச்சொல்லி நினைவுகூறுவதுண்டு.

2.திரு.பென்னிகுயிக்கின் சிலை,மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணலாம்.

3.மதுரை கோரிப்பாளை அருகில்,ஏதோவொரு அரசு அலுவலகத்திற்கு,பென்னிகுயிக் வளாகம் எனப் பெயரிட்டுள்ளனர்.

4.சமீபத்தில்,திரு.பென்னிகுயிக்கின் பேரன் தன் தாத்தா கட்டிய
அணையைக்காண வந்திருந்தபோது ,மதுரை மாவட்ட ஆட்சியர் அவரை வரவேற்று கெளரவித்தார்.

முன்னுரை மாதிரின்னு வச்சுக்கோங்களேன்

எல்லோருக்கும் வணக்கம்...

இந்த வலைப்பதிவுகள் விசயம் எனக்குப் புதுசு.
திசைகள் படிச்சிட்டு,நம்மளும் செய்வோம்னு வந்துட்டேன்.இங்க பார்த்த மக்கள் கலக்கிறாங்க.

சிங்கப்பூர் தமிழ்முரசில கவிதை எழுதறதோட சரி.திசைகள் திருமதி ரமாசங்கரன் அறிமுகம் செஞ்சாங்க. அப்புறம் நண்பன் நெப்போலியனும்,அண்ணன் பிச்சினிக்காடு இளங்கோவும் இணையத்தில் நிறையப்பத்திரிக்கை இருக்குப்பா..
தமிழ்முரசில கவிதைப்பக்கம் வந்ததும் டக்குனு பொறட்டிட்டு சினிமா பக்கத்துக்கு போய்டறவன் தான் அதிகம்.கவிதை படிக்கறவங்க கம்மி,இணையத்துல எழுதுனாங்க.

திசைகள்,திண்ணை,பதிவுகள்,தட்ஸ்தமிழ்னு எழுதிவுட்டேன்.என்னா ஆச்சரியம்.பிரசுரம் செஞ்சுட்டாங்க..குமுதத்துக்கும்,ஆனந்தவிகடன் உள்ளிட்ட ஏனைய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அனுப்பி,இந்த வாரம் போட்றுவாங்கையலா,அடுத்தவாரம் போடுவாங்கையலானு எந்தவாரத்திலும் போடாம நொந்துபோனவங்களுக்கு,இந்த இணைய இதழ்கள் வரப்பிரசாதம்.

அதையெல்லாம்விட... இந்தா, நான் என்னா நினைக்கிறனோ ,அதை எழுதமுடியுது பாருங்க,இந்த வலைப்பூக்கள்ல,இதுதாம்பா சூப்பரோ சூப்பர்.(இதைக்கண்டுபிடிச்சவனுக்கு மதுரையில் ஒரு செலை வைக்க நான் ஏற்பாடுபண்றேன்.)

ஆனா இந்த ஒருவாரமா ,வலைப்பூ ,தமிழ்மணம்,சுரதா இதையெல்லாம் துணையா வச்சுக்கிட்டு,நானும் ஒருவழியா எழுத ஆரம்பிச்சிட்டேன்.இந்த காசி,சுரதா ,அப்புறம் யாருப்பா,எல்லோருக்கும் நன்றி.நீங்க செய்றது தமிழுக்கு பெரியபணி.செம்மொழிக்கி யாருகாரணம்னு,மாலை மரியாதைக்கு,அடிச்சுக்கிட்டு கிடக்கிறவர்களுக்கு மத்தியில் நீங்க அமைதியா செஞ்சுக்கிட்டு இருக்கிற இந்த பணிகள் பிரமிப்பா இருக்கு.
(ஆமா யாராச்சும்,என் வலைப்பூவை படிப்பாங்கலா.இல்ல நானா புலம்பிக்கிட்டுக்கிடக்கனா?)

அப்புறம் இன்னும் நிறையபேரு,நல்ல விசயங்கள் எழுதுறாங்க.தொடர்ந்து நானும் எழுதலாம் முடிவுபண்ணிட்டேன்.(யாரும் படிச்சாலும்,படிக்காட்டாலும்)

நன்றி.

வீரமணி இளங்கோ

புகழ்

பெரும்பாலும்...
உன்னைப் பிரயோகித்த எல்லாநேரங்களிலும்
என் இலக்குகள் தரைமட்டமாய் போயிருக்கின்றன

நான் குறிவைத்தவர்களில்
உன்னை முள்ளாய் எண்ணிமுறித்துப்போட்டவர்கள் சிலர்
உன்னை மலராய் எண்ணி
உன் இன்னொரு தழுவலுக்காய்
தன் அலுவலை மறந்து திரிகிறவர்களே அநேகம் பேர்

நீ புத்திசாலிகளின் ஆயுதம்
முட்டாள்களின் சவக்குழி

அறிந்தவன் உன்னை விலக்கிச் செல்கிறான்
அறியாதவன் உன்னைச் சுமந்துசெல்கிறான்

சுமந்து செல்பவனுக்கு
விழுந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்தானே


வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்
veeramanielango@hotmail.com

கிரகாம் பெல்லுக்கு நன்றி!!!


ஒத்தடம்

வருவாயில் பெரும்பங்கை
நீ வாரிக்கொண்ட போதிலும்
உன்மீது வருத்தமில்லை!

நிழற்படங்களில் தழுவிக்கொள்ள இயலாத
எங்கள் அன்புக்குரியவர்களை
உன் நித்திரையைக் கலைத்துத்தானே
சத்தங்களிலாவது முத்தமிட்டுக்கொள்கிறோம்!

பெற்றோரிருந்தும் அனாதைகளாய்...
மணமுடித்தும் பிரம்மச்சாரிகளாய்...
சுற்றங்களிருந்தும் தனியர்களாய்...
இந்த வெளிநாட்டு மண்ணில்,
எங்கள் வேட்டைக்கார வாழ்க்கை உன்னாலேயே அர்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது!

உன் அழுக்கான தேகம்தான்
எங்களில் பலருக்கும்
குழந்தையின் கன்னமாயும்...
மனைவியின் இதழுமாயும்...

உயிரற்ற தொலைபேசியே!
நீ
இதயம் இல்லா சடமாய் இருந்தபோதிலும்

நீ
சுமந்துவரும் ஓசைகளே
வலிக்கின்ற எங்கள் இதயக் காயங்களுக்கு
ஒத்தடங்கள்!


விடுமுறை விஜயத்தில்





ஒப்பீடு

வெளிநாட்லயா இருக்கீங்க?
கேள்விக்குப் பதில்சொல்லி முடிக்கும்முன்
அவர்களுக்குத் தெரிந்த
யாரோ ஒருவரும்கூடவெளிநாட்டில்தான்
இருப்பதாகச் சொன்னார்கள்

என்னா சம்பளம்?
வாங்குவதைச் சொன்னபோதும்
சற்று அதிகப்படுத்திச் சொன்னபோதும்
அவர்களுக்குத் தெரிந்த
அந்த யாரோ ஒருவர்
என்னைவிட அதிகமாய் சம்பாதிப்பதாய்ச் சொன்னார்கள்

எத்தனை வருசமாச்சு?
ஐந்து வருடமென்றபோது
அவர் போயி ஏழெட்டு வருசமிருக்குமில்ல?
என பக்கத்திலிருப்பவரை விசாரித்துக்கொண்டார்கள்.

முஸ்தபாவில் வாங்கிய
ஹீரோ பேனாவை நீட்டியபோது
தன் வீட்டுத்தொலைக்காட்சிப்பெட்டியின்
மேலிருக்கிறவொன்றையோ

அலமாரியைத் துழாவி எடுத்துவந்த
ஏதோவொரு விலையுயர்ந்த பொருளையோகாட்டி
அந்த மேற்படி நபர் வாங்கிவந்ததாகச் சொன்னார்கள்

இப்படியாக...

நான் சென்றுவந்த எல்லா சொந்தக்காரர்வீடுகளிலும்
அவரவர்களுக்குத் தெரிந்த
அந்த வெளிநாட்டில் வாழும் நபர்கள்
என்னைச்சிறுமைப்படுத்திக் கொண்டேதான்இருக்கிறார்கள்!


வீரமணி இளங்கோவன்

என்னவளின் நினைவால்....




அவள்

நிமிர்த்த முடியாத
நாய்வாலைப் போல

விலக்கினாலும்
திரும்பத்திரும்ப
அவளையே சுற்றுகின்றன
நினைவலைகள்!

பள்ளம் நோக்கிப்பாய்கின்ற
ஒரு நதியைப்போல
அவளை நோக்கியே பாய்கின்றன
எண்ணங்கள்!

பள்ளிவிட்டதும்
ஓடிவந்து அம்மாவைத் தழுவிக்கொள்கிற
ஒரு குழந்தையைப்போல
அவளையே போய்த்தழுவிக்கொள்கின்றன
ஞாபகங்கள்!

நில்லாது சுற்றுகின்ற
ஒரு கடிகாரமுள்ளைப்போல
இடைவிடாது அவளையேநினைத்துக்கிடக்கிறது
நெஞ்சு!

பூ
வாசனையைச் சுமந்துக்கொண்டிருப்பதைப்போல
மனம்
அவள் நினைவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது!


சுடுமணலாய்க் கிடக்கிறேன்
நான்!

மழைத்துளியாய்ச் சொட்டுகிறது
அவள் நினைவுகள்!

வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்
veeramanielango@hotmail.com