ஒரு பொங்கல் உறுதிமொழி

நண்பர்களே,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

நம்நாடு விவசாயநாடு.நம்முன்னோர்கள் விவசாயிகள்.
பல்வேறு சமூகநிர்பந்தங்களால் நாம் வெவ்வேறான தொழில்களுக்கு மாறிக்கொண்டோம்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
தொழுதுண்டு பின்செல் பவர்" - குறள்

விவசாயம் செய்து வாழுகிறவன்தான் வாழ்பவன். மற்ற எல்லோரும் அவனைத்தொழுது கொண்டு பின்செல்பவர் - என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.

இன்றைய நிலை அப்படியா இருக்கிறது?சமூகத்தின் அடிமட்டத்தில் கிடக்கிறான் விவசாயி.கூலி வேலைக்குச்செல்பவன் கூட, தனக்கான ஊதியத்தை உயர்த்திக்கேட்கவோ அதனைத்தராவிடில் மறுத்துஒதுக்கவோ செய்யும் உரிமையைப்பெற்றுள்ளான்.

ஆனால்.விவசாயி மட்டும்தான் தான் உற்பத்திசெய்யும் பொருளுக்கு வேறொரு மூன்றாமவர் சொல்லும் விலைக்குவிற்றுவிட்டு வாய்மூடி மெளனியாகக்கிடக்கிறான்.

விவசாயப்பொருள்களுக்கு விலைநிர்ணயம் செய்யும் அரசு, அப்பொருள்களை கொண்டுதயாரிக்கப்படும் உணவுப்பொருள்களுக்கு எந்தவொரு விலையும் ஏன் நிர்ணயிக்கவில்லை?

60கிலோகிராம் என்கிற ஒரு மூடை- அரிசி இன்னவிலை என்கிற அரசானது, 100கிராம் இட்லி இன்னவிலை என்று அறிவிக்கலாமே?

உணவகங்களில் அவனவன் தன் விருப்பத்திற்கு விலைசொல்கிறான்.நாமும் வாயைமூடிக்கொண்டு கொடுத்துவிட்டுத்தான் வருகிறோம்.
ஏன் இந்த முரண்பாடு?

இளைத்தவன் என்றால் ஏறிமேயும் மனப்போக்கு அரசுக்குமட்டுமில்லை..நமக்கும் தான்.


தெருவில் இளநீர் விற்பவனிடமும்,
கொய்யாப்பழ கிழவியிடமும்,
வாழைப்பழ வியாபாரியிடமும்,

உழவர் சந்தைகளில்
கொத்தமல்லிக்கும்,கறிவேப்பிலைக்கும்
சண்டையிட்டு பேரம்பேசும் நீங்களும் நானும்,

ரூபாய்க்கு 3 கொய்யா என்ற கிழவியிடம் பேரம்பேசி 4 கொய்யா வாங்கியதாய் பீற்றிகொள்ளும் நீங்களும் நானும்,

கோவாஜூஸ்(அதாங்க கொய்யாப்பழச்சாறு) 28ரூபாய் என்கிற கடைக்காரனிடம் பேரம்பேசினோமா?

ஒருபிளேட் இட்லி(2 இட்லிங்க) - 15ரூபாய் என்கிற ஹோட்டல்காரனிடம் பேரம்பேசினோமா?

இளநீர் விற்பவனிடம் 2 ரூபாய் குறைக்கச்சொல்லிமிரட்டும் நாம்,
கோக்ககோலாவையும்,பெப்சியையும் 10பைசா குறைக்கச்சொல்லமுடியுமா?

அதைவிடுங்கய்யா...நம்மூரு தண்ணீ..அதைச்சுத்தம்செய்துஅக்குவாபீனாங்கிறான்..
அதைப் பைசாக்குறைக்காமல் வாங்கிக்குடிக்கத்தானே செய்கிறோம்?

வீட்டிற்கு சுண்ணாம்பு பூசுபவரிடமும்,
இரயில்நிலையத்தில் சுமைதூக்குபவரிடமும்,
விசேஷங்களுக்கு வரும் சமையல்காரரிடமும்,
இன்னும்பிற சிறுசிறு வியாபாரிகளிடமும்,விவசாயிகளிடமும்,கூலித்தொழிலாளர்களிடமும் பேரம்பேசுவதை ஒரு திறமையாகவே அங்கீகரிக்கிறோம்.

உழைப்பிற்கு உறுதுணையாய் நிற்கும் கால்நடைகளுக்கும்,
விளைச்சலுக்கு ஆதாரமாய் விளங்கும் ஆதவனுக்கும் நன்றிசெலுத்தும்விதமாய்நாம் இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறோம்.

அழிந்துகொண்டிருக்கும் விவசாயத்தொழிலுக்கு
நம்மால் ஏதும் செய்யமுடியாததெனினும்
குறைந்தபட்சம் விவசாயிகளுக்கு நேரிடையாய் இலாபத்தைத்தரும்
நம் உள்ளூர் விளைபொருட்களை நுகர்வதன்மூலமாயும்,
நியாயவிலை தருவதன்மூலமாயும்
சற்றேனும் ஊக்கப்படுத்தமுடியும்.

அதேபோல் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள தொழிலாளத்தோழர்களிடம் அதிகம்பேரம்பேசாமல் அவர்களின் உழைப்புக்கு நியாயமான அல்லது
சற்றே அதிகமான கூலித்தொகை கொடுப்பதும் நாம் இச்சமூகத்திற்கு செய்யும் நன்மையாய் அமையும்.

ஆதரவற்றோர்க்கும்,அனாதை இல்லங்களுக்கும் செய்வது மட்டும்தான் புண்ணியமா?

இந்தப்பொங்கல் திருநாளில் இவ்வாறான ஒரு உறுதிமொழியை மேற்கொள்வோமா நண்பர்களே?

வீரமணி இளங்கோவன்