இனிய வலைப்பூ நண்பர்களே

2004ல் வலைப்பதிவு தொடங்கி, வேறொரு நிறுவனத்திற்கு மாறியதன் விளைவாய் ஏற்பட்ட வேலைப்பளுவினாலும்,
திருமணத்திற்கு பிந்திய தலைகீழாய் வாழ்க்கைமுறையாலும்,
இன்னும் பிற அதானாலும்,இதானாலும்

மிக நீண்ட.......தொரு இடைவெளிக்குப்பின் மீண்டும் என் வலைப்பதிவை திறந்தேன்.

என் வலைப்பூ தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
தமிழ்மணம் முற்றிலும் வேறுபட்டிருந்தது.
நூற்றுக்கணக்கிலிருந்த வலைப்பூக்கள் ஆயிரங்களாயிருந்தன.
வேறுபல வலைப்பூத்திரட்டிகளின் உதயம்.
பல்வேறுவகையான புதிய வலைப்பூ தொழிற்நுட்ப சங்கதிகள்இன்னும் எனக்கு பிடிபடவேயில்லை.

இப்படியாய்...
ஆயுள் தண்டனைக்குப் பின் வெளியேவந்த ஒரு கைதியைப்போலஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறேன்.

என் வலைப்பூ நண்பர்கள் நூற்றுக்கணக்கான பதிவுகளைத்தாண்டியிருக்கிறார்கள்.மிகுந்த மகிழ்ச்சி.

8 ஆண்டுகள் சிங்கப்பூரில் பணி.தற்போது நான்கு மாதங்களாய் பெங்களூரில்..

நன்றி,இனி அடிக்கடி சந்திப்போம்.

நான்



வாங்கி வந்தததை அடைத்து நிமிர்வதற்குள்
அடுக்கடுக்காய் வந்துநிற்கின்றன
கடன்களும்அதற்கான காரணங்களும்!

அக்காவிற்கு மாப்பிள்ளை வாங்கிய வகையில்
ஆறேழு இலட்சங்கள்!
தம்பிக்கோ இன்ஜினியரிங் சீட்டோடு
பஜாஜ் பல்சர் ஒன்றும் வேண்டுமாம்!

ஓய்வுநாளற்ற வேலைப்பயணத்தில்
கிழமைகளோடு சேர்ந்து மறந்தேபோனது
என் பிறந்த நாளும்...

குருவிகள் சுமந்துவந்த
ஊர் முறுக்குகளுக்குபண்டமாற்றாக
ஆயிரங்களாய் அனுப்பியதில்
பழுதுபார்க்கப்பட்டது என் வீடு!
பழுதாகிக்கொண்டிருக்கிறது என் உடல்!!

வேலை அனுமதிச் சீட்டை
புதுப்பித்த செலவுபோக
மிஞ்சிய காசில்...
இண்டியன் ஏர்லைன்ஸ் டிக்கெட்டும்
இரண்டு ரெட்லேபிளும் தான் வாங்கமுடிந்தது!

கடனில் வாங்கிய கழுத்துச்செயினோடும்
கைவிரல் இரண்டில் அன்பளிப்பு மோதிரத்தோடும்

முஸ்தபா செண்டும்...
மேல்பரோ சிகரெட்டுமாய்...
வலம்வந்த
அந்த இருபதுநாள் ஊர்ப்பயணத்தில்
மறந்தேதான் போனது...
இரண்டுவருட வலி!

இதோ இன்னோரு ஊர்ப்பயணத்திற்காய்
காக்கிப்பேப்பரில் சோறோடும்...
கையில் கோப்பி'ஓ'வுமாய்...
நான்!!!


வீரமணி இளங்கோ