பெங்களூரு மேன்சன்

என் கல்லூரிவிடுதியைப் போலல்லாது
அறையின் சுவர்களும் கதவுகளின் பின்புறங்களும்
வெறிச்சோடியே கிடக்கின்றன
எந்தவொரு நடிகையின் புகைப்படங்களுமற்று!

வட்டில் தாளங்கள்
சினிமா,கிரிக்கெட் அரட்டைகள்
சூழ அமர்ந்து கேட்கப்படும் ஊர்க்கதைகள்
ஏதுமின்றி...
அமைதியாய் உண்கிறார்கள்
சாப்ட்வேர் இளைஞர்கள்!

மணிக்கொருமுறை எச்சரித்துவிட்டுப்போகும்
எங்கள் வார்டனைப்போலொரு பிரகஸ்பதி
இங்கு எவரும் இல்லாதபோதும்
சத்தமின்றியே ஒலிக்கிறது டிவி அறை!

அருகிலிருப்பவன் எந்தமொழிக்காரனோவென்ற ஐயத்தில்
பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கின்றன ஆங்கிலச்சேனல்கள்.

அயர்ன் வண்டி,சூப்பர் மார்க்கெட்
பேருந்துநிறுத்தம்
ஏனைய பிற சந்திப்புகளின்போதும் கூட
புன்னகையுடனே விலகிவிடுகிறான்
என் மேன்சன்மேட்!

அலப்பறை விடும்
வாட்ச்மேனின் கெடுபிடிக்கு நடுவிலும்
சீட்டாட்டக்கும்பல்,செகண்ட்ஷோ கும்பலென
அமர்க்களப்படும் கல்லூரிவிடுதி!

எதுவும் பிடித்தமின்றி
தனியனாய் அமர்ந்து
லேப்டாப்பில் கவிதையெழுதும் என்னைப்போன்றே
அவரவரும் கிடக்கிறார்கள் அறைக்குள்ளேயே!

அழியா....மல் கிடக்கிறது கல்லூரிவிடுதி!


வீரமணி இளங்கோ

தமிழன் இந்திகற்காதது சரியா?


தமிழன் இந்திபடிக்காதது சரியா?

அன்று தமிழக அரசியல்வாதிகளால் முடிவெடுக்கப்பட்டு,இன்றுவரை புறக்கணிக்கப்பட்டும் வருகிற இந்திமீது ஏன் இவ்வளவு வெறுப்பு?இந்திப்போராட்டம் என்றால் என்ன?

அதனால் இன்றைய தலைமுறை அடைந்தது நன்மையா?தீமையா?
இந்தி கற்காமல்விட்டதால் இழப்பா?இலாபமா?

அடிக்கடி எழும் இந்தக்கேள்விகளுக்கு,தமிழக அரசியல்சூழலில் ஆரோக்கியமான பதில் கிடைக்குமா?

இது சரியெனத்தீர்மானித்துவிடப்பட்ட முடிவுகளை அலசும் முயற்சி.

இந்தி எதிர்ப்புப்போராட்டம்:

இந்தி எதிர்ப்புப்போரட்டம் என்றால் என்ன? Anti-Hindi Impostion Agitation.
Hindi Imposition is nothing but Forcing Indian Government employees from TamilNadu to learn and work in Hindi (in non-Hindi areas) is Hindi imposition. Showing Hindi programmes all day in TamilNadu on Indian Government controlled television in spite of the expressed wishes of the people for more Tamil programmes is another example of Hindi imposition.

மேலும் பள்ளிகளில் வகுப்பு 6 முதல் 11 வரை இந்தியை கட்டாயமான மூன்றாவது பாடமாக ஆக்குவது.
அறிவிப்புப்பலகைகளில்,தமிழ் ,ஆங்கிலத்தோடு இந்தியையும் சேர்த்து எழுதுவது. இந்திய மற்றும் தமிழக அரசாணைகள் மேற்கூறிய மூன்றுமொழிகளிலும் அச்சிடுவது.

இந்திஎதிர்ப்பு போராட்டத்தின் ஆரம்பம்:

ஆங்கில ஆட்சியாளர்களின் கடைசிக்காலங்களில், இந்தியர்கள் தங்களுக்குள்ளாகவே பிராந்திய அரசுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதியளித்திருந்தனர்.காங்கிரஸ் சார்பில் சென்னை
மாகாணத்தை ஆண்ட சி.இராஜகோபாலச்சாரியார்(இராஜாஜி)இந்திமொழிக்கட்டாயத்தை கொண்டுவந்தார்.இதை எதிர்த்து 1938 ஜனவரி 3ந்தேதி இராஜாஜியின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதுதான் முதன்முதலாய் நடைபெற்ற இந்திஎதிர்ப்புப்போராட்டம்.

அதேஆண்டில்,பெரியார்,அண்ணா,சோமசுந்தரபாரதிதிரு.வி.க,மறைமலைஅடிகள்,தருமாம்பாள் மற்றும் கே.வி.பி.விசுவநாதம் ஆகியோர் தலைமையில் அங்காங்கே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபின் இது விலக்கிக்கொள்ளப்பட்டது.இந்தியதேசம் சுதந்திரமடைவதற்கு முன்பாகவே,பலமுறை
இந்திக்கட்டாயப்பாடம் திணிக்கப்படுவதும்,பின் போராட்டங்களுக்குப்பின் விலக்கிக்கொள்வதுமாகவே
இருந்துவந்திருக்கிறது.

தாளமுத்து,நடராசன்

1939ஜனவரியில் இந்தி எதிர்ப்புக்காக கைதுசெய்யப்பட்ட தாளமுத்து மற்றும் நடராஜன் போலீசாரின் அடி,உதையால் சிறைச்சாலையிலேயே மரணமடைந்தனர்.இந்திஎதிர்ப்புப்போராட்டத்தில் முதன்முதலாய் தமிழகத்தில் சிந்திய இரத்தம் இவர்களுடையதுதான்.
நாடு சுதந்திரமடைந்தபின்,ஆட்சிப்பொறுப்பேற்ற காங்கிரஸ்,இந்திபேசாத மாநிலங்களில்,இந்தித்திணிப்பை
தீவிரப்படுத்தியது.திரும்பவும் மேற்கூறிய தலைவர்கள் சேர்ந்து,போன்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு பின்னரும்இந்தி தொடர்ந்தது.

ஜனவரி 26,1950- இந்திய அரசியலமைப்புச்சட்டம்
இந்தி அல்லாத பிறமாநிலத்தலைவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே தேசியமொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது.
மேலும் ஜனவரி 26,1950 முதல் ஜனவரி 26,1965 வரை 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை-தேசிய மொழியாக இருக்குமெனவும்,அதன்பின் ஆங்கிலம் விலக்கப்பட்டு,இந்தி மட்டுமே முழுமையான தேசியமொழியாக இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டது.

1952ல் மத்திய அரசுஅலுவலகங்களில் இந்திஅறிவிப்புப்பலகைகளை கொண்டுவந்தது இந்திய அரசு.
பெரியார் தலைமையில் தி.கவும்,அண்ணா தலைமையில் தி.மு.கவும் இந்தி அறிவிப்புப்பலகைகளைத் தார்பூசிஅழிக்கும் போராட்டம் நடத்தினர். 1965ம் ஆண்டு வரை வருவதும் பின் போவதுமாக இருந்தன இந்தித்திணிப்பும் போராட்டங்களும்.

ஜனவரி 26,1965- கறுப்புதினம்
அறிவிக்கப்பட்ட 15ஆண்டுகள் முடிந்துவிட்டாயிற்று.குடியரசுதினத்தில் எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் படி 15ஆண்டுகளுக்குப்பின் இந்தி தேசியமொழியாக அரியணை ஏறியது.
இத்தினத்தை தி.மு.க கறுப்புதினமாக அறிவித்தது.தி.மு.க தலைவர்களும்,தொண்டர்களும் முதல்நாள் இரவே கைதுசெய்யப்பட்டனர்.

மாணவர் போரட்டம்:
ஜனவரி 26,விடுமுறைதினமாதலால்,25ந்தேதியே சென்னைப்பல்கலை மாணவர்கள் ஒருநாள் வகுப்புப்புறக்கணிப்புப்போராட்டம்
நடத்தினர்.அண்ணாமலைப்பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.இவர்களுக்கு ஆதரவளித்து கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகம் தன் வரலாற்றில்,இதுநாள்வரை சந்தித்திராத மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தைச்சந்தித்தது.

சென்னையில் நடைபெற்ற பேரணியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.எல்லாத்தமிழக நகரங்களிலும் பேரணிகள் அமைதியாய் நடைபெற்ற வேளையில், மதுரையில் வன்முறை தலைகாட்டத்துவங்கியது.
ஆளுங்கட்சியைச்சேர்ந்தவர்கள் மாணவர்சிலரை அரிவாளால் தாக்கினர்.அடுத்த இரண்டு வாரங்களும் தமிழக வரலாற்றில் அழிக்கமுடியாத கறுப்புநாட்கள். சுதந்திரப்போராட்டத்தை மிஞ்சும்வகையில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்த இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கனோர் உயிர்நீத்ததாக நம்பப்படுகிறது.மதுரைக்கலவரம் மற்றும் சிதம்பரம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டைக்கண்டித்து,தமிழகமெங்கும் போராட்டங்கள்
வெடித்தன.
அப்போதைய இந்தியப்பிரதமர் லால்பகதூர்சாஸ்திரியும்,உள்துறைஅமைச்சர் குல்சாரிலால் நந்தா மற்றும் தமிழகமுதல்வர் பக்தவச்சலமும் கூடிப்பேசி இப்பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதனெ முடிவெடுத்தனர்.

இராணுவமும்,துணைஇராணுவப்படைகளும் வந்திறங்கின.

தமிழகத்தின் ஒவ்வொருநகரமும் இரத்தம் சிந்தியது.கணக்கில்லாமல் போராட்டத்தினர் சுடப்பட்டார்கள்.

இறுதியாக,மத்திய அரசு பின்வாங்கியது.சட்டம் திரும்பப்பெறப்பட்டது.தமிழக அரசு,நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அத்தனை ஆதாரங்களையும் அழித்தது.இறந்தோர் எண்ணிக்கையும்,காயமடைந்தோர் எண்ணிக்கையும் இன்றுவரை தெளிவாய் அறியப்படவில்லை.

பொதுத்தேர்தல் 1967:
தமிழகமக்கள் தங்களது இந்திஎதிர்ப்பை காங்கிரஸ¤க்கெதிரான ஓட்டுக்களாக மாற்றினர்.இந்திப்போராட்டம் காங்கிரசின்
வீழ்ச்சியாகவும்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் எழுச்சியாகவும் அமைந்தது.தி.மு.க முதன்முதலாய் ஆட்சிக்கட்டில் ஏறியது.

இதர இந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட மும்மொழித்திட்டம்(அதாவது,ஆங்கிலம்,இந்தி,தாய்மொழி)ஏற்றுக்கொள்ளப்படாதெனவும்,
தமிழகம் இருமொழித்திட்டத்தை மட்டுமே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அன்றுமுதல் இன்றுவரை இந்தி அன்னியரின் மொழியாகவே அறியப்படுகிறது.

என் பார்வையில் ஒரு அலசல்:

இவ்வளவும் முடிந்தாயிற்று.உயிரைதந்து தமிழைக்காப்பாற்றியாயிற்று.
ஒருதலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை வந்தாயிற்று.என் அப்பா இந்திப்போராட்டத்தில் பங்கேற்றதாகக்கூறியிருக்கிறார்.
இந்தப்போராட்டத்தின் போது பிறந்தேயிருந்திராத எனக்குமாகச்சேர்த்து,
எடுக்கப்பட்டுவிட்ட முடிவுகள் என்னை எவ்விதம் பாதிக்கின்றன.
நான் அடைந்த இலாபம் யாது?

நான் சந்தித்த ஒருசில சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு:
சம்பவம் -1

நான் சிங்கப்பூரில் பணியிலிருந்த சமயம் அது.எங்கள் நிறுவனத்திற்கு இந்தியக்கிளையிலிருந்து ஒருவர் பயிற்சிக்காக வந்திருந்தார்
நானும்,சக சிங்கப்பூர்ஊழியர்(சீனர்) ஒருவரும் பணிநிமித்தமாக ஆங்கிலத்திலேயே அவருடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.
உடனிருந்த சீனர்,நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழியிலேயே உரையாடக்கூடாது?I dont mind என்றார்.ஆனால் வந்தவர் கன்னடர்.
அவர் இந்தியில் ஆரம்பிக்க நான் திருதிருவென விழித்தேன்.நாங்கள் இந்தியர்களாய் இருந்தபோதும்,எங்களிருவருக்குமான
பொதுவான மொழியொன்றுமில்லை என நான் சீனருக்கு உரைக்க,இன்றுவரை அவருக்கு காரணம் விளங்கவில்லை.
வந்த நண்பரோ,அங்கும் போட்டுஉடைத்தார்.Only tamilians dont know hindi என.

சம்பவம் -2
மிகச்சமீபமாய்,சீனத்தலைநகர் பெய்ஜிங் சென்றிருந்தேன்.அங்கு பத்துநாட்கள் வேலை.பத்துநாட்களாய் இந்தியரெவரும் தட்டுப்படவில்லை.திரும்ப ஊர் வருவதற்காக விமானநிலையம் வந்தேன்.சிங்கப்பூர் வந்து ,அங்கிருந்து பெங்களூர் வருவதாக ஏற்பாடு.
செக்-இன் வரிசையில் நிற்கும்போது,கையில் கறுப்புநிற இந்தியப்பாஸ்போர்ட்டோடு ஒருநண்பர்.உடனே பேச ஆரம்பித்தோம்.
பத்துதினங்களுக்குப்பின் ஒருஇந்தியனை சந்தித்த மகிழ்ச்சியில் நான்.
என்ன ஆச்சரியம்?அடுத்தடுத்து மூன்று இந்தியர்கள் வந்து நின்றார்கள் அந்த வரிசையில்.எங்கள் உரையாடலில்
அவர்களும் பங்கேற்றார்கள்.சொந்த ஊர்,சீன வருகையின் நோக்கம்,சீனஉணவு மற்றும் இந்திய உணவுகிடைக்காமல்,நாக்குசெத்துப்போய்விட்டதாகவும் ஏதெதோ பேசிக்கொண்டிருந்தோம்.அருகிலிருந்த வேறொரு நாட்டுப்பயணி எங்கள் உரையாடலைக்கேட்டுக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த நண்பர்,சட்டென இந்திக்குத்தாவினார்.உடனே எல்லோரும் இந்தியில் பேசிச்சிரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
வெளிநாட்டில்,இந்தியர்களைச் சந்தித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியிலிருந்த நான்,சில நிமிடங்களிலேயே அங்கே இந்தியர்களுக்குள்ளாகவே
தனிமைப்படுத்தப்பட்டேன்.
அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலத்தவர்கள்.ஆனால் எல்லோருக்கும் இந்தி தெரிந்திருந்தது.ஆனால் நான்?
அக்கணத்தில் என்மனதில் நம் அரசியல்வாதிகள் வந்துபோனார்கள்.
சம்பவம் -3
தற்போது,பெங்களூரில் வேலைசெய்கிறேன்.எங்கள் நிறுவனமானது,இந்தியா முழுவதற்கும் விற்பனை,மற்றும் விற்பனைக்குப்பிந்திய சேவைகள் வழங்கும் நிறுவனம்.எங்களது வாடிக்கையாளர்களில்,End user என்று சொல்லக்கூடிய மெஷின் ஆபரேட்டர்கள்,ஆங்கிலம் முழுமையாக அறிந்திருக்கவேண்டுமென்ற அவசியமில்லாதவர்கள்.சில சிக்கலான தொழிற்நுட்ப விஷயங்களை ஆங்கிலத்தில் விளக்கும்போது
புரியாமல் தடுமாறக்கூடிய சூழ்நிலை அவர்களில் பலருக்குண்டு.
என்னோடு பணிபுரியும் அனைத்துமாநிலப்பொறியாளர்களும்,ஆங்கிலம் மற்றும் இந்தி என எளிதாக வாடிக்கையாளர்களை கையாண்டு
கொண்டிருக்க நான் மட்டும் முழுமையாய் ஆங்கிலத்தைக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.
இத்தாலி நாட்டைச்சேர்ந்த,என் முதலாளி உன் நாட்டின் தேசியமொழி உனக்கு எப்படித்தெரியாமல் போயிற்று என்கிறார்?

அவருக்கு நான் என்ன பதில் சொல்ல?
உங்களுக்குத்தெரிந்தால் சொல்லுங்கள்.

இப்போது என் முன் நிற்கும் கேள்விகள்:

1. இந்தியை ஏற்றுக்கொண்ட மற்றமாநிலங்களில் அவர்களின் தாய்மொழி அழிந்துவிட்டதா?

2. இந்தியை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கெற்பட்ட இழப்பு என்ன?நமக்குக்கிடைத்த இலாபம் என்ன?

3. இந்தியாவை விட மிகப்பெரிய நாடு சீனா.அவர்களுக்கும் நம்மைப்போன்றே பிராந்திய மொழிகளுண்டு.
ஆனால் அவர்கள் எல்லோருக்குமான தேசிய மொழியாக மாண்டரினை ஏற்றுக்கொண்டார்கள்.எனவே அவர்களுக்கிடையே
வியாபாரரீதியாகவும்,வேலைவாய்ப்புக்களிலும் மிகுந்த ஒரு ஒற்றுமையைக்காணலாம்.அந்நாட்டின் வளர்ச்சிக்கு இதுவுமொரு
முக்கியக்காரணமல்லவா?

4. தாய்மொழிமட்டுமே படிப்பதாக ஜெர்மனியையும்,ஜப்பானையும்,சீனாவையும்,கொரியாவையும்துணைக்கழைக்கும் தமிழறிஞர்கள் அவர்களைனைவருக்கும் பிராந்தியமொழிகளிலிருப்பதையும்,தாங்கள் நாடுகளில் தேசியமொழியாக ஒரே மொழியை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையும் செளர்கரியமாக மறந்துவிடுவது ஏன்?

5.ஆங்கிலமொழிப்புலமையால்,தமிழர்கள் உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கின்றனர்.நன்று.ஆனால்,இந்தியாவிற்குள்ளாக
நம்மால் பிரகாசிக்கமுடியவில்லையே ஏன்?.அப்படியும் ஜெயிக்கிற தமிழனை உற்றுப்பார்த்தால் அவனுக்கு இந்திதெரிந்திருப்பதை
அறியமுடிகிறதல்லவா?

6.வேண்டுமானால் கற்றுக்கொள்ளுங்கள் யார் தடுத்தது என்கிறவாதம் முட்டாள்தனமானது.வசதியும் வாய்ப்பும் இருப்பவன் கற்றுக்கொள்வான்.
கிராமப்புற மாணவன்?

7.இன்றைக்கு இந்திய அரசியலில்,மாநிலக்கட்சிகளின் ஆளுமையை சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.அப்படியிருக்க
இந்தியை பள்ளிகளில் அனுமதிப்பதால் தமிழ் அழிந்துபோகும்,இந்திக்காரர்களின் ஆளுமைக்கு ஆளாகநேரிடும் என்றெல்லாம் அச்சம்தேவையா?

8.நாற்பது வருடங்களாக இந்தியை மூன்றாம் மொழியாகக்கற்றுவரும் மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் தங்கள் தாய்மொழியை
மறந்தா விட்டார்கள்?

9.அதையெல்லாம் விடுங்கள்.தமிழகத்தின் பிரதிநிதியாய் டெல்லியில் குரல்கொடுக்கும் அ.தி.மு.க வின் எம்.பி.யான மைத்ரேயன்
தன் தமிழ்மொழிப்பேச்சை மொழிமாற்றம் செய்ய மொழிப்பெயர்ப்பாளர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார் சமீபத்தில்.இந்நிலை ஏன்?

10.டெல்லி அரசியலோடு மிகுந்த நெருக்கம் கொண்டுள்ள கலைஞர் தன் பேரன்களுக்கு மட்டும் இந்திடியுஷன் அனுமதித்ததுவிட்டு
சாதாரண கடைநிலைத்தமிழனுக்கு இந்தியை அனுமதிக்கமறுப்பது ஏன்?

உண்மை புரிந்து,ஏதாவது ஒரு கட்சி இந்தியை ஆதரித்தாலும் மற்றக்கட்சிகள் இதைப்பயன்படுத்தி தன்னை தனிமைப்படுத்திவிடுமே
என்கிற அச்சத்தில் எல்லாக்கட்சிகளும் தமிழ்ப்பற்றுச்சாயத்தை பூசித்திரிகின்றன.இதனால் காலங்காலமாய் தனிமைப்பட்டுக்கிடப்பதென்னவோ
கடைநிலைத்தமிழன் மட்டுமே.

இது என் பார்வை மட்டுமே.வெறும் மொழியுணர்ச்சியோடு இப்பிரச்சனையை அணுகாமல் நடுநிலையைச்சிந்திந்து உங்கள் கருத்துக்களையும் தயவிட்டு இங்கே பதியுங்கள்

நன்றி.
வீரமணி இளங்கோ