ஒரு சந்தோஷப்பகிர்வு


நண்பர்களே,
ஒரு மகிழ்வான செய்தியை, சக குடும்ப உறுப்பினர்களிடம்
பகிர்ந்துகொள்வதான மனப்பாங்கோடு உங்களோடு
பகிர்ந்துகொள்கிறேன்.

சிங்கப்பூரின் நிரந்தரவாசத்தகுதி என்றழைக்கப்படும் Permanent Residentship
இன்று எனக்கு கிடைத்துள்ளது.

திருமணம் முடித்து,மனைவியை 3 மாத சுற்றுலா விசாவில் இங்கு அழைத்துவந்து
பிறகு,ஏர்போர்ட்டில் கண்ணீர் மல்க வழியனுப்பும் துர்பாக்கியத்திலிருந்து
ஒருவழியாக தப்பித்துவிட்டேன்.

இனி,வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொள்வதில்,எந்தச்சிக்கலும் இல்லையென்பதால்,
இத்தனை காலம் நான் பயந்து மரியாதை செலுத்திக்கொண்டிருந்த, என் தற்போதைய முதலாளிக்கு
சற்று மரியாதையைக் குறைத்துக்கொண்டு,லேசாக நெஞ்சை நிமிர்த்தித்திரியலாம்.

இப்படி,இன்னும் பல சலுகைகள் உள்ளன இந்த PR க்குள்.


வீரமணி இளங்கோ

என் புகைப்படங்கள்

என் புகைப்படங்கள்

எத்தனிப்பில்லாத சமயங்களில்
பதிவு செய்யப்பட்ட ஓரிரண்டைத்தவிர
மற்ற எல்லாப் புகைப்படங்களிலும்
வெளிப்படையாகவே தெரிகிறது
என் போலித்தனம்!

சிரிப்பது போன்றோ
இயல்பாக இருப்பது போன்றோ
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மன்னனுக்கான கம்பீரத்தையோ
என் புகைப்படங்கள் காட்டமுயன்றாலும்
இவையெல்லாவற்றையும் விடத்தூக்கலாகத் தெரிபவையென்னவோ
இந்தப் பாவனைகளுக்கான
என் மெனக்கெடல்கள் தான்!

பக்கத்து வீட்டுக்காரனிடமும்
என்னைப்பிடிக்காத சொந்தக்காரனிடமும்
காட்டிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்காக
நான் மிகுந்த உல்லாசமாய் இருப்பதுபோன்று
புகைப்படம் எடுக்க முனைந்ததில்
சுற்றுலாவுக்குச் சென்ற இடங்களை ஒழுங்காகப்பார்க்காமல் வந்தது
இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!

திருமணங்களுக்கோ
வேறெதாவது விழாக்களுக்கோ
அணிந்து செல்வதற்காகவே
பிரத்யோகமாக நாலைந்து முழுக்கைச்சட்டைகளை வாங்கிவைத்துள்ள எனக்கு

என் மாமனார்
கோட் வாங்கித்தந்தது
புகைப்படங்களுக்காகவேயன்றி எனக்காக அல்ல!

நான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறேன் பார்
என இரண்டாம்வகுப்பில் எடுத்த என் புகைப்படத்தை
மனைவியிடம் காட்டியதைத் தவிர்த்து

இதுவரை வேறெந்தப்பயன்பாடும்
இருந்ததாகத் தெரியவில்லை
என் புகைப்படங்களினால் ...

வீரமணி இளங்கோவன்

புரிந்துணர்காலம்

நிகழும் மங்களகரமான(இப்ப என்னா வருசம் நடக்குது),சரி விடுங்க,வர்ற ஜனவரி மாதம் 23ந்தேதி,எனக்குக்கல்யாணம்..

வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும்முறையான அழைப்பைப் பிறகு அனுப்புகிறேன்..

சிங்கப்பூரில், என் நண்பர்களில் பலபேர் அநேகமாக எல்லோருமே....
நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்து கல்யாணம் நடைபெறுவதற்குள்..

இடைப்பட்ட ஒரிருமாதங்களில்,
மேற்படி பெண்ணோடு கடலை போடபோனுக்காக செலவழித்த காசில்,இந்தியாவில் ஒருவீடே வாங்கியிருக்கலாம்.அந்தளவுக்கு போன்பில் கட்டுவார்கள்.

இரவானால் போதும்,அறைக்கதவைச்சாத்திக்கொண்டு...போனிலேயே தொங்கிக்கொண்டு கிடப்பார்கள் மணிக்கணக்கில்.

என்னய்யா பேசுறாய்ங்க இவ்வளவு நேரம்...என நாங்கள் கிண்டலடித்ததுண்டு.

இப்போது
அடியேனும் அந்த வேளையைஅணுவளவும் பிசகாது செய்து கொண்டிருக்கிறேன்.

போன் பில் வரும்போது தான் என்ன பேசினோம் ,இவ்வளவு நேரம் என யோசிக்கத்தோன்றுகிறது..

ஆனால்..

என்னுடைய ஒரு கவிதையில் சொன்னதைப்போல

"வருமானத்தில் பெரும்பாங்கை
நீ
வாரிக்கொண்டுபோனபோதும்
உன்மீது வருத்தமில்லை"

என்பதுதான் நினைவுக்கு வருகிறது.

என்னைப்போன்று புலம்பெயர் தமிழ் இளைஞர்களுக்கு,

இந்த நிச்சயதார்த்தத்திற்கும்,திருமணத்திற்கும் இடைப்பட்ட காலம்தான்வருங்கால மனைவியைப் புரிந்துகொள்வதற்கான காலகட்டம்..

என்ன?அதற்கு நாங்கள் சற்று அதிகமான விலைகொடுக்கிறோம்.

பணம் திரும்பவும் வரும்..

திரும்பவும் வருமா?இந்தக்காலம்..

சிங்கை கவிஞர் இக்பால் ஒருமுறை என்னிடம் சொன்னார்.

காதலிக்கு இணை காதலிதான்..
அதே காதலி மனைவியானாலும்,,,
அந்தக்காதலியின் இடத்தை..இவளால் பூர்த்திசெய்யமுடியாதென்று.

சரிதானா நண்பர்களே?

வீரமணி இளங்கோவன்
சிங்கப்பூர்..