என் புகைப்படங்கள்

என் புகைப்படங்கள்

எத்தனிப்பில்லாத சமயங்களில்
பதிவு செய்யப்பட்ட ஓரிரண்டைத்தவிர
மற்ற எல்லாப் புகைப்படங்களிலும்
வெளிப்படையாகவே தெரிகிறது
என் போலித்தனம்!

சிரிப்பது போன்றோ
இயல்பாக இருப்பது போன்றோ
சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிற ஒரு மன்னனுக்கான கம்பீரத்தையோ
என் புகைப்படங்கள் காட்டமுயன்றாலும்
இவையெல்லாவற்றையும் விடத்தூக்கலாகத் தெரிபவையென்னவோ
இந்தப் பாவனைகளுக்கான
என் மெனக்கெடல்கள் தான்!

பக்கத்து வீட்டுக்காரனிடமும்
என்னைப்பிடிக்காத சொந்தக்காரனிடமும்
காட்டிக்கொள்ளவேண்டிய அவசியத்திற்காக
நான் மிகுந்த உல்லாசமாய் இருப்பதுபோன்று
புகைப்படம் எடுக்க முனைந்ததில்
சுற்றுலாவுக்குச் சென்ற இடங்களை ஒழுங்காகப்பார்க்காமல் வந்தது
இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது!

திருமணங்களுக்கோ
வேறெதாவது விழாக்களுக்கோ
அணிந்து செல்வதற்காகவே
பிரத்யோகமாக நாலைந்து முழுக்கைச்சட்டைகளை வாங்கிவைத்துள்ள எனக்கு

என் மாமனார்
கோட் வாங்கித்தந்தது
புகைப்படங்களுக்காகவேயன்றி எனக்காக அல்ல!

நான் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறேன் பார்
என இரண்டாம்வகுப்பில் எடுத்த என் புகைப்படத்தை
மனைவியிடம் காட்டியதைத் தவிர்த்து

இதுவரை வேறெந்தப்பயன்பாடும்
இருந்ததாகத் தெரியவில்லை
என் புகைப்படங்களினால் ...

வீரமணி இளங்கோவன்

7 Comments:

Anonymous Anonymous said...

Excellent!
Yatharthama iruku

-Nirviya

December 13, 2004 at 10:09 AM  

Blogger பினாத்தல் சுரேஷ் said...

கவிதை மிக அருமை மற்றும் யதார்த்தம்.

சுரேஷ்

December 19, 2004 at 9:40 AM  

Blogger தங்ஸ் said...

ரொம்ப அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்!

December 24, 2004 at 1:17 PM  

Blogger தங்ஸ் said...

ரொம்ப அருமையா இருக்கு.வாழ்த்துக்கள்!

December 24, 2004 at 1:17 PM  

Blogger b said...

மிக அருமையான கவிதை. ரசித்துப் படித்தேன். நலமாக இருக்கிறீர்களா இளங்கோ?

December 12, 2005 at 6:54 AM  

Blogger Mukavaivaalidhasan said...

நெஞ்சில் நிற்கிறது ஆயிரம் புகைப்படம்

October 20, 2016 at 5:30 AM  

Blogger Mukavaivaalidhasan said...

நெஞ்சில் நிற்கிறது ஆயிரம் புகைப்படம்

October 20, 2016 at 5:30 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home